- அக்கு ஹீலர் போஸ் கே. முகமது மீரா
தழிழ் நாட்டில் அக்குபங்சர் என்னும் மறுமலர்ச்சி அல்லது புரட்சி
தொடங்குவதற்கு வித்தாக இருந்த டாக்டர் சகோதரர்களை இன்று நினைவூட்டுவது மட்டும் அல்லாமல்,
நாம் எல்லாம் யாருடைய வாரிசுகள், எவருடைய வழித்தோன்றல்கள், நாம் எந்த நிலையில் எவ்வாறு
இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் மருத்துவத் துறை மட்டுமல்லாமல் வாழ்க்கை நெறியையும்
கற்றுக் கொடுத்து சென்ற நமது முன்னோடிகளான என்னுடைய மானசீக குரு மற்றும் ஆசான் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் நினைவேந்தலை நாம் இன்று
நடத்திக் கொண்டிருக்கிறோம்.
1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் நான் வெளிநாட்டில் இருக்கும்போது
சென்னையில் அக்குபங்சர் என்னும் மருத்துவத்தை டாக்டர் சகோதரர்கள் இருவர் செய்கிறார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஊருக்கு வந்திருந்த சமயத்தில் பண்ருட்டியை சேர்ந்த
என் நண்பர் ஒருவர் நெஞ்சுவலி மற்றும் ரத்தக்குழாய் அடைப்பிற்கு அக்குபங்சர் சிகிச்சை
எடுத்துக் கொண்டதாக என்னிடம் கூறினார். அந்த தருணங்களில் மட்டும் அல்ல இன்றும் ஆங்கில
அகராதியில் அக்குபங்சர் மருத்துவம் என்றால் வலியை நீக்கக்கூடிய வலி நிவாரணி என்று தவறான
மேற்கத்திய சதி சூழ்ச்சியாக ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நியாயமான முறையில் அக்குபங்சர் என்பது சீன நாட்டின் ஒரு முழுமை பெற்ற
மருத்துவ முறை என்று குறிப்பிடப்பட வேண்டும்.
உண்மையை மூடி மறைப்பதற்காக “வலிகளை மட்டும் நீக்கக்கூடிய வலி நிவாரணி” என்ற கருத்தை
உடைத்தெறிந்து, இந்த அக்குபங்சர் மருத்துவத்தால் குணமாகாத நோய்களே இல்லை என்பதை செயல்
மூலமாக நிரூபணம் செய்து சென்ற டாக்டர் சகோதரர்களை நாம் இன்று நினைவு கூறுகிறோம். இன்று
நாம் எல்லாம் அக்குஹீலர் எங்களுடைய வாழ்க்கையின்
வாழ்வாதாரமும் வாழ்க்கையின் பொருளாதாரமும் இதைக் கொண்டுதான் என்ற பெருமை மிகு வாழ்க்கை
நெறியை உண்டாக்கி வைத்திருக்கிறோம். அதற்கெல்லாம் நமக்கு வித்தாக வழிகாட்டியாக நம்பிக்கை
ஊட்டிகளாக இருந்த அவர்களை நினைவூட்டக்கூடிய தருணமாக இந்த கருத்தரங்கை நான் பார்க்கிறேன்.
1998 களுக்கு முன்பு, ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக வேறு மருத்துவங்கள்
இல்லை என்ற நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். ஆங்கில மருத்துவத்தின் மீது அலாதியான
மரியாதையும், ஈர்ப்பும் பற்றும் இருந்த காலம். என் துணைவியாருக்கு கர்ப்பவாயில் ஏற்பட்ட புண் ஏழு ஆண்டுகளாக பல்வேறு
ஆங்கில மருத்துவ நிபுணர்களை பார்த்தும் குணமாக வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டு என்
குடும்ப பெண் மருத்துவர், என் மனைவிக்கு உண்டான புண் இந்த உலகத்தில் எந்த மூலைக்குப்
போனாலும் சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்குவது ஒன்றுதான்
தீர்வு என்று கூறினார். என் குடும்பத்தில் என் சகோதரிகளுக்கும் சகோதரர்களின் மனைவிகளுக்கும்
கர்ப்பப்பை நீக்கப்பட்டு அவர்களுக்கு நீண்டகாலமாக
ஏற்பட்ட அசௌகரியங்களையும் வேதனைகளையும் பார்த்து,
என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்வதில் எனக்கு
உடன்பாடு இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில், நான் வெளிநாட்டில் இருந்தபோது
கேள்விப்பட்ட இரண்டு நபர்கள் தான் டாக்டர் சித்திக் ஜமால் மற்றும் டாக்டர் ஃபஸ்லுர்
ரஹ்மான். இருவரும் சகோதரர்கள். டாக்டர் சித்திக் ஜமால் அண்ணன். டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான்
தம்பி. இவர்கள் இருவரும் சென்னையில் அக்குபங்சர் மருத்துவம் செய்வதாக கேள்விப்பட்ட
போது, என் மனைவியின் அறுவை சிகிச்சையை சிலகாலம் தள்ளிப் போடலாம் என்ற முடிவில் அக்குபங்சர்
மருத்துவத்திற்கு செல்ல நினைத்தேன். அக்குபங்சர் மருத்துவம் என்பது ஒரு சீன மருத்துவம்.
வலிகளை நீக்கக்கூடியது என்று மட்டுமே எனக்கு அப்பொழுது தெரியும்.
தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது சிகிச்சை நேரம் காலை 6 மணி
முதல் 10 மணி வரை என்று கூறினார்கள். அதிகாலையிலான சிகிச்சை நேரம் என்பது எங்களுக்கு
ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் கம்பத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சிகிச்சைக்கு
சென்றோம். நாங்கள் சென்ற முதல் நாள் சந்தித்தது டாக்டர் சித்திக் ஜமால் அவர்களை. என
மனைவிக்கு நாடி பார்த்து ஒரு நிமிடத்தில் சிகிச்சை அளித்தார். அந்த நேரத்தில் அது ஏற்றுக்கொள்ள
முடியாத சஞ்சலமான சலனமான மனநிலையாக இருந்தது. ஆறு முதல் ஏழு முறை சிகிச்சை எடுத்தப்
பிறகு என் மனைவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் மாதாந்திர காலத்தில்
“ஏன் பெண்ணாகப் பிறந்தோம் இது துயரமாக இருக்கிறதே” என்று நினைக்கக் கூடிய நிலை இன்றும் இருக்கிறது. இன்றுள்ள ஆங்கில மருத்துவர்களுமே அதை நம்பவைத்து விட்டார்கள். என் துணைவியாருக்கும் அவ்வாறே
இருந்தது. அந்த நிலையை எல்லாம் உடைத்தெறிந்தது அந்த சிகிச்சை. சிகிச்சைக்குப் பிறகு
மாதாந்திர நாட்களில் அவர்கள் மிகவும் சுகமாக எந்த வேதனையும் இன்றி இருந்ததை நான் பார்த்தேன்.
அதன் பிறகே அந்த மருத்துவத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை
எடுத்தப் பிறகு அவர்களுக்கு கர்ப்பவாயில் ஏற்பட்டிருந்த புண் குணமானது.
நாம் எவ்வளவுதான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம் ஆரோக்கியத்தை ஆங்கில
மருத்துவரிடம் சென்று “நீ சுகமாக இருக்கிறாய்” என்று கூறுவதை கேட்ட பிறகே ஏற்றுக்கொள்ளக்
கூடிய மனநிலை இன்று உள்ளது. அதே மனநிலையில் தான் நாங்கள் அன்று இருந்தோம். எங்கள் குடும்ப
டாக்டரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்த போது அவர்கள் “புண் இருந்த தடமே தெரியவில்லை.
என்ன செய்தீர்கள்” என்று கேட்டார். திரைக்கு உள்ளிருந்து அவர்கள் பேசுவது எனக்கு கேட்கிறது.
அந்த நிமிடம்தான் என் மனமாற்றத்தின் ஒட்டுமொத்தத்திற்கான மூலம். சினிமாவில் ஒரு அதிர்ச்சியான
செய்தியை சொன்னவுடன் எரிமலை வெடிக்கும் பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும். அதே போல எனக்கு
இருந்தது. ஏனென்றால் அந்த அளவு ஆங்கில மருத்துவத்தின் மீது அதீதமான நம்பிக்கை கொண்ட காலம் அது. அந்த தருணத்தில் நம்பிக்கை எல்லாம்
சுக்கு நூறாக உடைந்தது. அதே குடும்ப மருத்துவர்தான் எங்களிடம் “உலகத்தின் எந்த மூலைக்கு
சென்றாலும் அந்த புண்ணை ஆற்ற முடியாது. கர்ப்பப்பையை எடுப்பது தான் தீர்வு” என்று கூறி
இருந்தார்.
அக்குபங்சர் சிகிச்சைக்கு நாங்கள் போனது போன்றே தெரியவில்லை. சென்னைக்கு
சுற்றுலா செல்வது போல் தான் இருந்தது. அப்படியொரு சிகிச்சையில் குணம் அடைந்தது என்றால்
எங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதுபோன்ற ஒரு மகத்தான
சிகிச்சைமுறை இருப்பது வெளி உலகத்திற்கு ஏன் தெரியாமல் போனது யாரால் அது மறைக்கப்பட்டது
என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது.
டாக்டர் “சபீர் அப்துல்லா” வின் தந்தை “டாக்டர் சி. அப்துல்லா சேஹு”
விடம் இந்த மருத்துவத்தை படிக்க ஆரம்பிக்கும் போது காரைக்குடியில் வகுப்புகள் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் வகுப்புகள் இருக்கும். இன்று நாம் ஒரு வருட படிப்பில் சொல்லிக் கொடுக்கிறோம்.
அங்கு ஐந்து நாட்களில் அனைத்து சக்தி ஓட்டப் பாதைகளையும் அனைத்து புள்ளிகளையும் சொல்லிக்
கொடுத்து விடுவார்கள். அங்கு அக்குபங்சர் படித்தேன்.
டாக்டர் சகோதரர்களிடம் சிகிச்சைக்கு சென்ற காலத்தில், நாடிப்பார்த்து
அதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதுதான் சரியான புள்ளியாக இருக்கும் என்று தெரிந்தது.
டாக்டர் ஹீமேஸ்வரி அவர்களிடம் நாடி படித்துவிட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தப் பிறகு
டாக்டர் சகோதரர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அக்குபங்சர் மருத்துவத்தை எப்படி கற்றார்கள் என்பதை
96 முதல் 99 ஆம் வருடங்களில் “ஹெல்த் டைம்”
என்ற பத்திரிகையில் எழுதி வந்தார்கள். வேறு யாரும் அவ்வாறு வெளிப்படையாக எழுதி இருக்க
மாட்டார்கள்.
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மருத்துவத்தின் ஆதி அந்தங்களை தெரிந்த
ஒரு மருத்துவர் மக்களிடம் அறிக்கை விட்டு, “இந்த ஆங்கில மருத்துவம் மனித குலத்தின்
சாபக்கேடு” என்று கூறுகிறார். உயிர் மிரட்டல், கொலை மிரட்டல் நாடு கடத்தல் என்று அனைத்தும்
அந்த மருத்துவர் மீது நடந்தேறியது. அவர் அதற்கு அஞ்சவில்லை. தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அந்த சத்தியத்தில் நின்றதற்காக இயற்கை அவருக்கு கொடுத்த
பரிசே ஹோமியோபதி. அவருக்கு பிரிட்டிஷ் நாடு அடைக்கலம் கொடுத்தது. ஹோமியோபதி மருத்துவத்தை
ஆங்கிலம் படித்த டாக்டர்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார். மருத்துவர் என்பதற்கு படிக்கும்
படிப்போ வாங்கும் பட்டமோ பொருள் அல்ல. உண்மைத் தன்மையில் நிலைத்து நிற்பது. தனது பொறுப்பில்
சரியாக நிற்பது. “நாம் மருத்துவம் செய்தால் நோயாளி குணம் அடைய வேண்டும் அப்படி ஆகவில்லை
என்றால் என்ன வந்தாலும் சரி உயிரே போனாலும் சரி அந்த மருத்துவத்தை நாம் செய்யக்கூடாது” என்ற நிலைப்பாடை கொள்பவனே உண்மையான
மருத்துவன்.
இருபதாம் நூற்றாண்டில் அதன் வழித்தோன்றல்கள் தான் டாக்டர் சகோதரர்கள்.
இருவரும் ஆங்கில மருத்துவத்தின் எம். பி. பி. எஸ். முடித்து ஒருவர் எம். டி., யும்
இன்னொருவர் டிப்ளமோவும் படித்து தினமும் பல ஆயிரக்கணக்கான வருமானத்தை பார்த்துக் கொண்டு
இருந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மனதில் ஆங்கில மருத்துவத்தின் மீது ஈடுபாடு கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இந்த மருத்துவத்தில்
நோயாளிகள் குணம் அடைவதில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அப்பொழுதுதான் அவர்கள் தேடல்
தொடங்குகிறது. எந்த மருத்துவத்தில் நோயாளிகள் குணம் அடைவார்கள் என்ற தேடலில் அவர்களுக்கு
ஹோமியோபதியும் அக்குபங்சரும் அறிமுகம் ஆகிறது.
டாக்டர் சித்திக் ஜமால் அவர்கள் ஹோமியோபதியும் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் அக்குபங்சரும் படிக்க
சென்றார்கள். இருவரும் படித்துவிட்டு சிகிச்சை
செய்ய தொடங்கிய போது, டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்
அவர்கள், “அக்குபங்சர் மருத்துவத்தில்தான் மருந்தே இல்லாத சிகிச்சைமுறை இருக்கிறது.
இதுதான் எளிமையாக இருக்கும்” என்று கூற இருவரும் அக்குபங்சர் மருத்துவத்தை கையில் எடுத்து
சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.
“ஒரே ஒரு புள்ளியைக் கொண்டு பத்தாயிரம் நோய்களை களையக் கூடிய சாத்தியம்
அக்குபங்சர் மருத்துவத்தில் உள்ளது” என்ற சீன மருத்துவர் டாக்டர் “உ. வே. பிங்” கின்
கூற்றை டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் படித்து
அந்தப் புள்ளியை நாம் அடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொள்கிறார்கள். அவர்களுடன் டாக்டர்
ஹீமேஸ்வரி அவர்கள் மற்றும் அக்குபங்சர் மருத்துவம் செய்யும் ஏழு பேர் சேர்ந்த ஒரு குழுவாக
நாடியை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏழு வகையான நாடிப் பரிசோதனைகளை ஆராய்ந்து, “எளிமையான முறை எது? நாமும் கற்று மற்றவர்களுக்கும்
கற்று கொடுப்பதற்கு உகந்தது எது ?” என்று ஆலோசிக்கிறார்கள். “எங்கள் ஏழு பேரில் டாக்டர் சித்திக் ஜமால் அவர்களுக்கும்
டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் மட்டுமே நாடி முறை புரிகிறது. எங்கள் யாருக்கும்
அது புரியவில்லை” என்று ஹீமேஸ்வரி அவர்கள் என்னிடம் கூறினார். அப்படி எளிமையாக்கி வைக்கப்பட்ட
அந்த விஷயத்தை அவர்கள் சிகிச்சை முறையாக செய்து பல லட்சம் நோயாளிகள் குணமாவதை பார்த்தப்
பிறகுதான் இதைத் தொழிலாக எடுத்து செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தைக்
கைவிட்டார்கள்.
இந்தச் சூழலில் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு குடும்பத்தில்
ஒரே சமயத்தில் இருவர் எம். பி. பி. எஸ்., படிக்கிறார்கள். அதற்கு அவர்கள் எவ்வளவு செலவு
செய்திருப்பார்கள். அந்த மருத்துவத்தை கைவிட்டவுடன் எந்த மாதிரியான எதிர்ப்புகள் வந்திருக்கும். டாக்டர்
ஃபஸ்லூர் ரஹ்மான் மக்கள் சந்திப்பு மேடை ஒன்றில் பேசும்போது, “எங்களைப் பெற்றவர்கள்
இந்த இரண்டு பேரையும் பிள்ளைகளாகப் பெற்றதற்கு இரண்டு மாடுகளையும் கழுதைகளையும் பிள்ளைகளாகப்
பெற்றிருக்கலாம் என்று கூறினார்கள்” என்று பகிர்ந்துக் கொள்கிறார். அவர்கள் தந்தை உயர்நீதி
மன்றத்தில் ஒரு பிரபல வழக்கறிஞர். பலவித நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவர்கள் சலனம் அடையாமல்
“ஆங்கில மருத்துவம் தவறான மருத்துவம் அதை செய்தால் நாம் மட்டும் அல்ல நம் குடும்பம்
நம் சந்ததிகள் தழைக்காது” என்று கூறினார்கள்.
டாக்டர்களுக்கு பெண் கொடுப்பவர்கள் அவர்கள் செய்யும் வேலையையும்
பொருளாதார சூழலையும் பார்ப்பார்கள். அந்த விமர்சனமும் இவர்களுக்கு வருகிறது. இன்னும்
சொல்லப் போனால் அவர்கள் குழந்தைகள் அக்குபங்சர் மருத்துவத்தை இன்றுவரை ஏற்கவில்லை.
ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் அசையவில்லை. மாறவில்லை. விட்டுக் கொடுக்கவில்லை. மெடிக்கல்
கவுன்சிலில் இருந்து. “நீங்கள் ஆங்கில மருத்துவத்தை விமர்சனம் செய்து வேறு மருத்துவம்
செய்கிறீர்கள். நாங்கள் கொடுத்த பட்டத்தை ஏன் நாங்கள் பறித்துக்கொள்ளக் கூடாது ?” என்று
ஒரு மிரட்டல் வருகிறது. அதற்கு, “நீங்கள் கொடுத்த பட்டத்தை நாங்கள் என்றோ கூவத்தில்
எறிந்து விட்டோம். போய் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள். அந்த தெளிவு,
தைரியம் என்கிருந்து வந்ததென்றால் “நான் ஒரு மருத்துவன். என்னிடம் வரும் நோயாளி குணம்
ஆவதைத் தாண்டி நான் வேறு எதுவும் செய்துவிடக் கூடாது” என்ற விழிப்பு நிலை கவன நிலைதான்
வித்தாக இருக்கிறது. அந்த நிலைப்பாட்டை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“நான் ஒரு மருத்துவன் எனக்கென்று இந்த மக்கள் மீது பொறுப்பிருக்கிறது.
எப்படி ஒரு அரசனுக்கு மக்கள் மீது பொறுப்பிருக்கிறதோ அதை விட ஒரு படி மேலே மருத்துவனுக்கு
இருக்கிறது” என்பதை நமக்கெல்லாம் உணர்த்திக் காட்டி வாழ்ந்துக் காட்டி சென்றவர். எத்தனையோ
கொலை மிரட்டல்கள் வந்தும் மாறவில்லை, “நான் சென்னை சாந்தோமில் தான் இருக்கிறேன். வா”
என்று முகவரி கொடுத்தவர் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள்.
சத்தியத்தில் நான் நிற்பேன் என்ற உண்மையை தூக்கிப் பிடித்தவர்களை
அந்த சத்தியம் இறுதிவரை பாதுகாத்தது. அதுதான் நாம் இந்த தருணத்தில் நினைவு கொள்ள வேண்டிய விஷயம். அவர்களை புகழ்வது
அவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் கடந்து வந்த பாதை இருக்கிறதே அது நமக்கெல்லாம் நினைவில்
மாறாமல் இருக்க வேண்டிய முன்மாதிரியாக வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய சம்பவங்கள்
மற்றும் நினைவுகள்.
ஒரு பெரிய குடும்பத்தை சார்ந்தவர்கள் வண்டியில் செல்கிறார்கள். வண்டி
பெட்ரோல் இல்லாமல் நின்று விடுகிறது. அதுவே ஒரு அவமானம். வண்டியை தள்ளி ஓரமாக நிறுத்திவிட்டு
அக்குபங்சரில் காசு வரும் வந்தப் பிறகு பெட்ரோல் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று வீட்டுக்கு
சென்றார்கள் இல்லையா இது எல்லாம் என்ன தன்மை என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த “டாக்டர் சாமுவேல் ஹானிமேன்” என்ற
ஒரு மருத்துவர் தன்னுடைய இறுதி காலத்தில் “ஒவ்வொரு மருத்துவனும் ஆன்ம பலத்தோடு செயல்பட
வேண்டும். மனிதனின் ஆன்ம சக்தி என்பது அவன் உடலோடு ஒட்டி இருக்கக்கூடிய உயிர் ஆற்றல்.
அந்த உயிர் ஆற்றல் தான் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய பேராற்றல், அத்தனை அறிவும்
அத்தனை ஞானமும் அத்தனை ஆற்றலும் அதற்குத்தான் இருக்கிறது. அதைக்கொண்டு செயல்படும்போது
தான் ஒரு மனிதன் தன்னுடைய செயலை முழுமையாக செயல்படுத்த முடியும்” என்பதை சொல்லி சென்றவர்.
அதை இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த மருத்துவன் ஆன்ம பலத்தோடு செயல்படுவது என்றால்
என்ன எப்படி என்று செய்து காண்பித்திருக்கிறார்.
அதன் பெயர் தான் “இறைநிலை மருத்துவம்”. அக்குபங்சரின் உயர்ந்த நிலையும் மேன்மையான நிலையும் கொண்டு மருத்துவன் என்றால் எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தார். அவருடைய விஷயங்கள் எல்லாம் மறைக்கப்
படவில்லை. இங்கு அதுதான் முக்கியமான ஒன்று. “நமக்கெல்லாம் கொடுக்கப்பட்டதே பிறருக்கு
கொடுப்பதற்கு தான். நமக்கு வழங்கப்பட்ட அனைத்தும் வழங்குவதற்கு தான்.” என்று எங்களுக்கு
சொன்னார்கள். கற்றதை எல்லாம் பொது உடைமைகளாக ஆக்கி வைத்தார்கள். பொது உடைமைக்கு முன்மாதிரி
அவர்கள் தான். எதையும் மறைக்கவில்லை.
2000 ஆண்டிற்கு பிறகு இறைவழி மருத்துவம் என்று அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.
இறை வழி மருத்துவத்தை கற்றுக் கொடுக்கிறோம் என்று பொது மக்கள் மத்தியில் இலவசமாக சொல்லிக்
கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். “இறைவழி மருத்துவத்திற்கான வகுப்பு நடக்கும் அதற்கான
கட்டணம் ஒரு லட்சம்” என்று ஒருமுறை அறிவிக்கிறார்கள். வகுப்பு முடிந்தப் பிறகு “இது
தனியாக சொல்லிக்கொடுக்கப் போகிறீர்களா? இலவச வகுப்பில் பொதுமக்களுக்கு சொல்லிக்கொடுப்பதை
தான் அங்கும் சொல்லிக்கொடுப்பீர்களா அல்லது வேறு எதாவதா?” என்று சந்தேகப்பட்டுக் கேட்டோம்.
“என்னுடையத் தகுதிக்கு பொதுவில் சொல்வதை நான் கேட்கமாட்டேன். தனியாக
வந்துதான் கேட்பேன் என்று கூறுபவனுக்கு தான் ஒரு லட்சம் ரூபாய். இங்கு என்ன சொல்கிறோமோ
அதை விட கம்மியாக தான் அங்கு சொல்வோம். இங்கு பொதுமக்களுக்கு முன் எடுத்து வைப்பதே
எனக்கு விருப்பமாக இருக்கிறது” என்று டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் கூறினார்.
“நாங்கள் அந்த வகுப்பிற்கு வரலாமா ?” என்று கேட்டபோது “நீங்கள் எதற்கு
வரவேண்டும் நீங்கள் தான் மாதா மாதம் நடக்கும் நம் வகுப்புகளுக்கு வருகிறீர்களே அது
போதும் அங்குதான் அனைத்தும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது” என்று கூறினார். அக்குபங்சர்
மருத்துவத்தை தெளிவாக தீர்க்கமாக ஒரே ஒருப் புள்ளியில் சிகிச்சை செய்வது எவ்வாறு என்பதை
அழகாக சொல்லி வைத்துப் போனார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்ததற்கு பிறகு தான் அக்குபங்சர்
மருத்துவத்தில் நான் தெளிவாக செயல்பட ஆரம்பித்தேன்.
மாதாமாதம் பொதுமக்களுக்காக “இறைவழி வகுப்பு” என்ற பெயரில் நடக்கும்
வகுப்பில் உடல் தத்துவத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து வைப்பார்கள். அந்த புரிதலில்
அக்குபங்சர் மருத்துவத்தின் தார்ப்பரியம் முழுமையாக விளங்கும்.
சீன நாட்டின் பூர்வீகமாக பாரம்பரிய மருத்துவமாக இருக்கக்கூடிய அக்குபங்சர்
மருத்துவத்தை இப்பொழுது நாம் சென்று சீன மருத்துவர்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய அளவு தெளிவு, ஆழம், தத்துவார்த்தப்
புரிதல் நமக்கு இருக்கிறது. இன்று அந்த அளவில் சீனாவில் இருக்கிறதா என்பது கேள்விக்குரிதான்.
அந்த அளவுக்கு அக்குபங்சர் மருத்துவத்தை தெளிவாய்
பொது இடத்தில் பொதுமக்களுக்காக திறந்து வைத்துப் போனார்கள். இது என்ன நிலை இது என்ன
தன்மை என்பதை உணர வேண்டும். இன்று நாம் எல்லாம் நமக்கெல்லாம் வித்தாக இருந்த வழிகாட்டிகளை
நினைவுக் கொள்ளக் கூடிய தருணம். அந்த தன்மையை நாமும் நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு
நடந்தால்தான் நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய நன்றியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். அதற்கு பிறகு, இறைவழி மருத்துவ வகுப்புகள் மதுரை, சென்னை, சேலம் போன்ற பல
இடங்களில் நடக்கும். மதுரையில் நடக்கும் வகுப்புகளுக்கு
நாங்கள் தொடர்ந்து செல்வோம். ஆறுமாத காலம் வரை என்ன சொல்கிறார் என்பது புரியாமல் இருந்தது.
ஏதோ நல்ல விஷயம் சொல்வது போல புரிந்ததே தவிர என்ன சொல்கிறார் என்று புரியவே இல்லை.
நாம் படித்துக்கொண்டு இருக்கும் அக்குபங்சர் மருத்துவத்தில் உயிர் தத்துவம் மற்றும்
உடல் தத்துவம் என்ற இரண்டு கூறுகள் இருக்கின்றன. நாம் உடல் தத்துவம் பற்றி மட்டுமே
பேசுகிறோம். அதைத் தாண்டி உள்ள உயிர் தத்துவத்தை மிக அழகாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
உயிர் தத்துவத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற பார்வையை அந்த இறைவழி
மருத்துவம் அளித்தது. உயிர் தத்துவத்தை முதல் முதலில் எனக்கு துவங்கி வைத்தவர் என்னுடைய
ஞானக் கண்ணை திறந்து வைத்தவர் எனது மானசீக ஆசான். எனது வழிகாட்டி டாக்டர் ஃபஸ்லூர்
ரஹ்மான் அவர்கள்.
ஆன்மீக ரீதியில் தீட்சை வழங்குதல் என்று கூறுவோம். தீட்சை என்றால்
நெற்றியில் கை வைத்து சொல்லி செல்வதில்லை. உள்ளுக்குள் இருக்கக்கூடிய உணர்வு என்ற மூன்றாம்
கண்ணை திறந்து வைத்து எதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை
உணர்வதே தீட்சை. தன்னுடைய பேச்சில் அந்த தீட்சையை எனக்கு கொடுத்தவர் டாக்டர் ஃபஸ்லூர்
ரஹ்மான் அவர்கள். அதன் பிறகுதான் இந்த உடலின் உயிர் தத்துவம் எனக்கு விளங்க ஆரம்பித்தது.
அது ஆன்மீகம் இது மருத்துவம் என்று உடலையும் உயிரையும் தனியாகப் பார்க்கும் கண்ணோட்டம்
கொண்டிருக்கிறோம். அது மாபெரும் தவறு. உடலையும் உயிரையும் பிரிக்கவே முடியாது. அவை
இரண்டையும் ஒன்றாக ஆக்கி உடலில் ஆரம்பித்து அந்த அறிவில் இருந்து உயிர் தத்துவத்திற்கு
செல்ல வேண்டும் என்பதை தன் செயல்பாட்டால் செய்து காண்பித்துவிட்டு சென்றார். ஒரு மருத்துவனாக
பொறுப்பேற்ற பிறகு அவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்வார். “நீ தேங்கி நிற்காதே
அடுத்த கட்டத்திற்கு சென்றுக் கொண்டே இருக்க வேண்டும். உனக்கு கிடைத்ததை வைத்துக்கொண்டு
இருக்காதே. அது உனக்கு தடையாக குப்பையாக மாறிவிடும். கொடுத்துவிடு” என்று என்னைப் பார்க்கும்
போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.
டாக்டர் ஹீமேஸ்வரி அவர்கள்தான் எனக்கு நாடி சொல்லிக் கொடுத்தார்கள்.
அவர்களிடம் படித்துவிட்டு கிளினிக்கில் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்
எனக்கு எப்பொழுதெல்லாம் சந்தேகங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் டாக்டர் ஃபஸ்லூர்
ரஹ்மான் அவர்களின் குரல் தான் கேட்கும். “இது இப்படி இருந்தால் இது இப்படி” என்ற குரல்
கேட்டுக் கொண்டே இருக்கும். நான் மானசீகமாக என் குருவாக என் ஆசானாக என் வழிகாட்டியாக
அவரை என மனதில் ஏற்படுத்திக் கொண்டேன். என் உள்ளத்தில் இந்த நாடிப் பார்த்தல் என்ற
ஒரு கலையை மிக எளிமையாக அள்ளிக் கொடுத்தார். அதில் இருந்து புறப்பட்டது தான் இந்த
“கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்“. அதில் இருந்து உண்டாக்கப்பட்டவர்கள் தான் நாம்.
அவர்கள் நம்முடைய வித்து, நம்முடைய வேர். வேரின் தன்மை கிளைகளிலும்
இலைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய
அஞ்சலி. அப்பொழுது மட்டும் தான் அவர்களுடைய ஆன்மா நம் மீது ஆசீர்வாதத்தை வழங்கிக் கொண்டே
இருக்கும். அதுதான் அவர்களுக்கு செய்யக் கூடிய நன்றி. அந்த நன்றியை நினைவுக் கூறுவதற்காகத்தான்
நாம் எல்லாம் இன்று ஒன்று கூடி இருக்கிறோம்.
நம்மையும் தாண்டி அக்குபங்சர் மருத்துவ உலகில் இருக்கக்கூடிய முன்னோடிகள்
எல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் டாக்டர் சகோதரர்களின் பங்களிப்பு குறித்து
தங்கள் அனுபவங்களை நம்முடன் உரையாற்ற இருக்கிறார்கள். இவை எல்லாம் நம் மனதில் பதித்து
வைக்கப்பட்டு நம் வாழ்க்கைக்கு முன் மாதிரியாக விளங்கும்.
“உனக்கு ஒரு வாரம் கெடு தருகிறேன். அதற்குள் நீ அக்குபங்சரை விட்டு
வெளியேராவிட்டால் அடுத்த ஏழாவது நாள் நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என்று ஒரு கொலை
மிரட்டல் வந்தால் நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
“கொலை மிரட்டல் வந்திருக்கிறது கொஞ்சம் பார்த்து செய்வோம்” என்று நாம் நினைப்போம்.
உள்ளுக்குள் பயம் நம்மை ஆட்டிப் படைக்கும். அந்த பயம் ஒரு இம்மி அளவு கூட அவர்களை அசைக்கவில்லை.
அதுதான் பிரத்தியாகாரம்.
கம்பத்தில் எங்கள் குடும்ப பெண் மருத்துவர் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும்
சுகப்பிரசவம் தான் பார்ப்பார்கள். சில நாட்கள் கழித்து அதை கைவிட்டு விட்டு சிசேரியன்
அறுவை சிகிச்சை முறைக்கு வந்து விட்டார்கள். என்னவென்று விசாரித்தபோது ஆங்கில மருத்துவ
அசோசியேஷனில் இருந்து “நீங்கள் மட்டும் சுகப்பிரசவம் செய்கிறீர்கள். ஆபரேஷன் செய்ய
மாட்டீர்களா” என்று கேட்டவுடன் அவர்கள் ஆபரேஷன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் தமிழ் நாட்டையே திருப்பிப் போடும் வேலையை
செய்துக்கொண்டு இருந்தார். மருத்துவ உலகத்தையே சிம்ம சொப்பனமாக ஆக்கிக் கொண்டிருந்த
நபர்களை சும்மா விடுவார்களா. எதற்கும் அஞ்சாமல் அவர்கள் இருந்ததால் தான் யோகத்தில்
உள்ள அடுத்த நிலையான “தாரணை” என்ற நிலைக்கு சென்றார்கள். தாரணை என்றால் “நீ விருப்பத்தைக்கொள் அது நடக்கும்” என்பது. பிரத்தியாகாரம்
என்று சொல்லக்கூடிய புறத்தில் உள்ள எதற்கும் அஞ்சாது நடுங்காது அதன் தாக்கத்தை அகத்திற்கு
உள்ளே அனுமதிக்காமல் தான் கொண்ட நேர் பாதையில் சத்திய நிலையில் உறுதியாக இருப்பவர்களுக்கு
தாரணை நடக்கும்.
உலக வாழ்க்கையில் எங்கு தொடங்க வேண்டும் எங்கு சென்று முடிக்க வேண்டும்
என்ற தத்துவத்தை புரியாமல் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும்
பொருளில் இருந்து கண்ணுக்குத் தெரியாத பொருளில் சென்று நிற்க வேண்டும். அதுதான் வாழ்க்கை.
அவன் முழுமையாக வாழ்ந்ததற்கான அடையாளம். அந்த வாழ்க்கையை தான் நம் ஆசான் நமக்காக வாழ்ந்துக்காட்டி
சென்றுள்ளார். கண்ணுக்குத் தெரியும் அறிவில் இருந்து ஆரம்பித்து உடலில் இருந்து ஆரம்பித்து
கண்ணுக்குத் தெரியாத பேராற்றலை நினைத்தால் சுகம்.
எத்தனை கடினமான நோய் பாதிப்புக்கு உள்ளானவரையும் ஒரு நொடியில் குணம்
அடைய வைத்தவர். சரியாகிவிடும் என்ற வார்த்தை எவ்வளவு பெரிய சக்தி. அது எப்படி வந்தது.
நாமும் சொல்லிச் சொல்லிப் பார்ப்போமா சரியாகிவிடும் என்று. ஏன் நமக்கு ஆகவில்லை. இதுதான்
நாம் கேட்க வேண்டிய கேள்வி. அதற்கு தகுதியானவராக ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.
இதுதான் நாம் யோசிக்கவேண்டிய சிந்தனை. இது தான் நம் ஆசான் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்களோ
அப்படியே நான். எதை நோக்கி விரல் காண்பித்து விட்டு சென்றார்களோ அதை நான் தொடர்கிறேன்.
ஒரு முறை அக்கு ஹீலர் தேவராஜன், நான் எல்லாம் அவரை பார்க்கப் போயிருக்கிறோம்.
“இன்னும் நீடில் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்களா, தூக்கிப் போடுங்கள்” என்று கூறினார்.
அவ்வளவுதான். அந்த நிமிடத்தில் இருந்து நாங்கள் விரலால் தொட்டு சிகிச்சை செய்ய ஆரம்பித்து
விட்டோம். ஒரு நோயாளி கூட எங்களிடம் ஏன் சார் ஊசிக் குத்தவில்லையா?” என்று கேட்கவில்லை. அதுதான் ஆசானின் நிலை. அதுதான்
வழிகாட்டியின் நிலை. “நீ நினைத்தால் சரியாகிவிடும் ஏன் நீ நினைக்க மாட்டேன் என்கிறாய்”
என்று நம்மை வழிகாட்டிக் கொண்டே இருந்தார்கள்.
நாம் எந்த இடத்திற்கு எந்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை
நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் “ஏன் இன்னும் அக்குபங்சர் செய்துக் கொண்டு இருக்கிறீர்கள்
வாருங்கள்” என்று அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு அடிப்படையான வேலை இருக்கிறது, நாம் அவர்களின் அழைப்பிற்கு போக முடியாமல் இருந்ததினால்
அவர்களின் வருத்தத்தற்கு ஆளானோம். அவ்வளவுதான். இதில் எங்களுக்கு சந்தோஷம் தான். அவர்
திட்டினால் அது எங்களுக்கு நன்மை. அவர் திட்டினால் அது எங்களுக்கு மேன்மை. அவர் திட்டினால் அது எங்களுக்கு பல படிப்பினைகள்.
அவர் கற்றுக் கொடுத்த அக்குபங்சர் என்ற அடிப்படை விஷயம் இன்றும்
தொடர்கிறது. இந்த அடிப்படையை மக்கள் மனதில் போட்டே ஆகவேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.
அதற்கு முன்மாதிரியாக எல்லாமே தொடங்கி வைத்துவிட்டு சென்றார். இந்த உலகத்துக்கே நம்
தமிழ்நாடு தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கொக்கரித்து சொல்லிவிட்டு சென்றார்கள்.
வெறும் வார்த்தை இல்லை. ஆசை இல்லை. பெருமைக்காக இல்லை. இந்த மருத்துவத்தை
தூக்கி நிறுத்தி, மருந்து இல்லாமல் தான் நோய் சரியாகும் என்ற சத்தியத்தை தூக்கி நிறுத்த
வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடங்கிய செயல்பாடுகள் அனைத்தும் நமக்கு முன்மாதிரி.
அவர்கள் எதிர்பார்த்த ஒரு பகுதியை நாம் முடித்திருக்கிறோம் என்று
நான் நம்புகிறேன். இரண்டாவது பகுதியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை.
உடல் தத்துவத்தை ஓரளவு புரிந்துக்கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அடுத்தது
உயிர் தத்துவத்தை நோக்கி நாம் வேகமாக விரைவாக பயணிக்க வேண்டும்.
அவருடைய கனவு “இந்த தமிழ்நாடு புண்ணிய பூமியாக மாற வேண்டும், இந்த
மண்ணில் நோயாளி கால் வைத்துவிட்டால் அவன் நோயில்லாமல் ஆகவேண்டும்.” இந்த வார்த்தைகளை
எங்கள் கண்களை பார்த்துப் பேசவில்லை. இந்த எண்ணத்தை, இந்த ஆர்வத்தை எங்கள் உள்ளத்தில்
பதிய வைத்து சென்றார்கள். அவற்றை இப்பொழுது நாம் நினைவூட்ட வேண்டிய தருணம். நமக்கு
என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தாரோ எதையெல்லாம் நமக்கு இலக்காக ஆக்கி வைத்தாரோ அந்த இலக்கை
நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதற்காக அவர் எங்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை.
நாமும் எந்த பயிற்சியும் செய்யவில்லை.
அவர் சொன்ன ஒரு விஷயம் “எண்ணத்தை கொள். அந்த எண்ணத்தில் நீ உறுதியாக
நில். அந்த எண்ணத்தில் சிறிதும் குறைந்துவிடாதே நடந்தே தீரும்.” எண்ணம் மட்டுமே வைக்க
சொன்னார். எண்ணம் மட்டுமே நான் வைத்தேன். நிச்சயமாக உறுதியாக திட்டவட்டமாக தீர்க்கமாக
என் ஆசான் மீது சத்தியமாக நான் அந்த நிலையை எட்டி இருக்கிறேன். உயிர் தத்துவத்தை உணர்ந்திருக்கிறேன்.
அக்கு ஹீலர்களாகிய நாம் அந்த நிலையை எட்ட வேண்டும் என்ற அழைப்பாக டாக்டர் சகோதரர்களுடைய
அக்குபங்சர் மறுமலர்ச்சிக்கு அவர்கள் செய்த பங்கை நாம் நினைவூட்டும் இந்த காலத்தில்
இந்த தருணத்தில் அவர்கள் எனக்கு காட்டிய பாதையில் நான் விரைவாக நிச்சயமாக சென்றுக்கொண்டு
இருக்கிறேன் என்பதைப் பதிவது மட்டுமல்லாமல் கம்பம் அகாடமி சார்ந்த எல்லோரும் அந்தப்
பாதையில் சென்று உலக மக்களுக்கு முன் மாதிரிகளாக இருக்க வேண்டும்.
மருத்துவ உலகத்தையே புரட்டிப் போட்டு மனிதகுலம் தூக்கி நிற்கப்படுவதற்காக மருந்து என்ற ஆக்டோபஸால் சூழப்பட்டு இருக்கக்கூடிய கொடூரத் தன்மையில் இருந்து மக்களை மீட்பதற்காக மிகப்பெரும் ஆயுதத்தை வல்லமைக் கொண்ட ஆயுதத்தை நமக்கெல்லாம் விட்டு சென்றிருக்கிறார்கள்.
தனக்கென்று எதையும் ஒளித்து வைக்காமல் பொது உடைமையாக ஆக்கி வைத்திருக்கிறார். நமக்கு அவர் கற்றுக் கொடுத்ததே அதுதான். “தொழில் ரகசியம் என்று எதையும் ஒளித்து வைக்காதே அது இறைவனுக்கு செய்யக்கூடிய மாபெரும் துரோகம் தப்பிக்கவே முடியாது” என்று எச்சரித்துக் கொண்டே இருப்பார். அதுதான் நமக்கான அடிப்படை. அதுதான் நமக்கான ஆணிவேர். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாம் எல்லாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை இந்த கருத்தரங்கில் வைக்க வேண்டிய முதல் விஷயமாக பார்க்கிறேன்.
நம் நடைமுறையில் செயல்பாட்டில் தடுமாற்றங்கள் இருக்கலாம். அவர்களுக்கும்
இருந்தது. எந்த தீர்க்க தரிசியாக இருந்தாலும் தான் எடுத்துக்கொண்ட தத்துவத்தில் இருந்து
செயல்படுவதிலும் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதிலும் பலவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும்.
தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் அதில் கரைந்து போய்விடாமல் அதில் இருந்து எழுந்து, அந்த
தடுமாற்றத்தில் விழுந்த சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு இன்னும் வேகமாக சென்றார்.
அதுதான் அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தப் பாடம். தடுமாற்றம் என்பது மண்ணுலக வாழ்க்கையில்
இருக்கும் ஒன்று. அதை பொருட்படுத்தாமல் படிப்பினையாக எடுத்துக்கொண்டு நாம் எல்லாம்
முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
நம் ஆசான் நமக்கு காட்டிக் கொடுத்த இலக்கை நாம் அடைய வேண்டும். இந்த
தமிழக மண் அக்கு ஹீலர்களின் செயல்பாட்டைக் கொண்டு அக்கு ஹீலர்களின் தூய்மையான உன்னதமான
எண்ணத்தைக் கொண்டு புண்ணிய பூமியாக மாறுவதற்கு நாம் எல்லாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்
என்ற விருப்பத்தை பதிவு செய்துக் கொண்டு என்னுடைய ஆசானுக்காக ஒரு கருத்தரங்கை நடத்தி
அதை பதிவு செய்வதற்கான வாய்ப்பை கொடுத்தமைக்காக நம்மை எல்லாம் படைத்த இறைவனுக்கு நன்றி
கூறிக்கொண்டு என் உரையை முடிக்கிறேன்.
தொகுப்பு: ப்ரியா ஜெயகாந்த்

.jpg)
1 கருத்துகள்
அருமையான தொகுப்பு 👌👌👌
பதிலளிநீக்குஆகச் சிறந்த வரலாற்று ஆவணம்.வாழ்த்துகள் ப்ரியா ஜெயகாந்த் தோழர்💐💐💐🥰😍🥰