டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் - ஓர் அமைதியான புரட்சியாளர் - புனிதவதி


அலோபதி மருத்துவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அலோபதி மருத்துவர் அக்குபங்சர் மருத்துவத்தின் மறுமலர்ச்சியாக விளங்கிய டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள். நன்றி செலுத்தும் விதமாக அவரது நினைவுகளை பகிர்ந்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ள இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் முடிவுகள் எடுத்த சில தருணங்கள், வாழ்க்கையில் கடந்துவந்த, விஷயங்கள் போன்ற பிரமிப்பை ஏற்படுத்திய சிலவற்றை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் மிகக் கைராசியான அலோபதி மருத்துவராக ஆறு ஆண்டுகள் பயிற்சியில் இருந்த சமயத்தில் அவரது கிளினிக்கிற்கு வந்த ஒருவர் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு “நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் கால் ஆணிக்காக உங்களிடம் சிகிச்சை எடுக்க வந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்கிறார். “ஆமாம் அப்பொழுது உங்களுக்கு நிறைய புண்கள் இருக்கும் அதில் சீழும் ரத்தமுமாக வெளியேறிக் கொண்டு இருக்கும். நாங்கள் டிரெஸ்ஸிங் செய்து மருந்து போட்டு அனுப்புவோம். சில நாட்கள் கழித்து எப்படி டிரெஸ்ஸிங் செய்வது என்றும் சொல்லிக்கொடுத்தோம். இப்பொழுது கால் எப்படி இருக்கிறது” என்று கேட்கிறார். அவர் காலை காண்பிக்கும்போது அங்கு புண், ஆணி, இருந்த தடமே இல்லை. நமது சிகிச்சையில் நல்ல பலன் வந்திருக்கிறது என்று அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் கொடுத்த மருந்து எதுவுமே வேலை செய்யவில்லை. உங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு சீழ் வருவதோ வீக்கமோ வலியோ எதுவும் சரியாகவில்லை. என் தொந்தரவுகளை பார்த்து என் நண்பர் ஒருவர் சிறிய டப்பாவில் கடுகு போன்று சிறிய மாத்திரைகள் கொடுத்தார். அன்றில் இருந்து நீங்கள் கொடுத்த மருந்துகளை நிறுத்திவிட்டு அந்த மருந்தை நான் சாப்பிட ஆரம்பித்தேன். முதல் நாள் எனக்கு வீக்கம் குறைந்தது. அடுத்தடுத்த நாட்கள் எனக்கு வலிகள் குறைய ஆரம்பித்தது. ஐந்தாவது நாள் ஆணி எனக்கு வெளியில் வந்துவிட்டது. பதினைந்து நாட்களில் என் புண் சுத்தமாக ஆறி விட்டது.” என்று அவரது அனுபவத்தை அவர் கூறுகிறார்.

“அவர் எடுத்து காண்பித்த அந்த மருந்தை பார்த்த போதுதான் அந்த ஹோமியோபதி மருந்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம். அவர் வெளியில் சென்றதும் அடுத்து வந்தவர் கால் ஆணி என்று வந்தார். அவருக்கு அந்த ஹோமியோபதி மருந்துகளை நாங்கள் பரிந்துரை செய்தோம். அந்த டப்பாவில் இருந்த சென்னை முகவரிக்கு சென்றோம். அந்த மருந்தையும் அங்கிருந்த அத்தனை புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு எங்கள் கிளினிக்கிற்கு வந்தோம். அதுவரை நோயாளிகள் அனைவரும் எங்களுக்காக காத்திருந்தார்கள். அன்றில் இருந்து அந்த புத்தகங்களை இரவு பகலாக வாசித்துவிட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். அந்த நொடியில் நாங்கள் அலோபதி மருத்துவத்தை தூக்கி எறிந்தோம்.” என்று அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் முடிவு எடுப்பதற்கு யோசிக்கவில்லை. நாளை என்ன செய்யப்போகிறோம் என்று அவர்கள் யோசிக்கவில்லை.. அவர்கள் செய்துவந்திருந்த மருத்துவம் தவறானது அதைவிட மேன்மையான மருத்துவம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்த அந்த நொடியே அவர்கள் பார்த்துவந்த அலோபதி மருத்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு ஹோமியோபதி மருத்துவத்தை கையில் எடுத்தார்கள். இதை மிக முக்கியமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். அடுத்து நாம் பார்க்கவேண்டியது டாக்டர் அவர்களின் தைரியமும் தெம்பும். அவர் அலோபதி மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு முதன் முதலில் அரசு மருத்துவப்பணி கிடைக்கிறது. அதில் சேர்வதா வேண்டாமா என்ற குழப்பம் அவருக்கு ஏற்படுகிற போது அவரது நண்பர்கள் “கிடைக்காத ஒரு வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது உடனடியாக அதில் சேர்ந்துவிடு” என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இவருக்கு குழப்ப நிலை இருந்ததால் தன் தந்தையிடம் அந்த பணியில் சேரலாமா என்று கேட்டபோது “ஓர் அனுபவத்திற்கு வேண்டுமானால் அந்த வேளையில் சென்று சேர்ந்துக்கொள். ஆனால் கண்ணியக் குறைவு ஏற்பட்டால் அந்த தருணத்தில் அந்த பணியில் இருந்து விலகி வந்துவிடலாம்” எவ்வளவு சீக்கிரம் அந்த வேளையில் இருந்து நீ வருகிறாய் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்” என்று அவரது தந்தையும் அவரது அண்ணன் டாக்டர் சித்திக் ஜமாலும் சொல்லி அனுப்புகிறார்கள்.

சேலத்தில், ஆத்தூரில் உள்ள பி. கே. சி. யில் அவருக்கு வேலை கிடைக்கிறது. முதல் நாள் அவர் அங்கு சென்றபோது, சேலத்தில் உள்ள DMO (டிஸ்டிரிக்ட் மெடிக்கல் ஆஃபிசர்) வை சந்தித்துவிட்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். “நான் அவரை சந்திக்கச் சென்றேன். அவர் அங்கு இல்லை. அவரது அசிஸ்டெண்டிடம் அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்” என்று கூறுகிறார். மறுநாள் டி. எம். ஒ விடம் தொலைபேசியிலாவது நீங்கள் பேசுங்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு காலையில் பணி ஆரம்பித்துவிடுகிறது. நூறு நோயாளிகளை பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் இவர் ஃபோன் செய்வதற்கு மறந்துவிடுகிறார். ஆனால் டி. எம். ஒ. இவருக்கு ஃபோன் செய்து அதிகார தொனியில், ‘தன்னிடம் ஏன் பேசவில்லை’ என்று கேட்டதும் இவர் பதில் ஏதும் அளிக்காமல் ஃபோனை தூண்டித்துவிடுகிறார். மூன்றாவது நாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆத்தூர் பி. கே. சி. க்கு டி. எம். ஒ. வந்து விடுகிறார். டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களை தன்னை வந்து சந்திக்குமாறு சொல்கிறார். இந்த செய்தி டாக்டர் அவர்களுக்கு சென்றதும் வெளியில் காத்திருந்த 80 நோயாளிகளை பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூற, உடனடியாக டி. எம். ஒ. வை சந்திக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். டாக்டர் அவர்கள் டி. எம். ஒ. அறைக்கு செல்கிறார். அவர் வந்திருப்பதை பார்த்துவிட்டு இவரை உள்ளே அழைக்காமல் மற்ற ஃபைல்களை பார்த்துக் கொண்டு இருக்கிறார் டி. எம். ஒ. இவர் சிறிது நேரம் காத்திருந்து விட்டு ஒரு நாற்காலியில் அமர்கிறார். அதை பார்த்து அந்த டி. எம். ஒ. வசை மாரிப் பொழிகிறார். அதற்கு டாக்டர் அவர்கள் “வெளியில் 80 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கிறார்கள். உண்மையில் இந்த மருத்துவத்திற்கு நீங்கள் மரியாதை செய்பவராக இருந்தால் அவர்களை பார்த்துவிட்டு வருவதற்கு காத்திருந்திருக்கலாம். அவசரமாக அழைத்து விட்டு நீங்கள் வேறு ஃபைல்களை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால் நான் அமர்ந்தேன்” என்று கூற அவர் மேலும் கோபமாகி “உன்னை நான் இடமாற்றம் செய்கிறேன். இதுதான் உனக்கான தண்டனை” என்று கூறியவுடன் “இவ்வளவு சத்தமாக கூறுவதை நான் அங்கிருந்தே கேட்டிருப்பேன் இங்கு அழைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே. இந்த ஆத்தூரில் நான் வேலைக்கு சேர்ந்திருப்பதால் நான் எந்த பக்கபலமும் இல்லாதவன் என்று நீங்கள் நினைத்துவிட்டீர்களா. நான் மனது வைத்தால் உங்களை இடமாற்றம் செய்ய முடியும். ஆனால் நீங்கள் இவ்வாறு பேசியப் பிறகு இங்கு நான் வேலை செய்ய மாட்டேன். உங்களை இடமாற்றம் செய்துவிட்டு அதன் பிறகு வந்து பணியில் சேர்கிறேன்” என்று கூறி பணியில் சேர்ந்த நான்காவது நாள் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறார். அதை கேட்டு பயந்த டி. எம். ஒ., சில நண்பர்களை அனுப்பி அவரை மீண்டும் அழைத்து வரச் சொல்கிறார். அவர்களிடம், “இறைவனைத் தவிர வேறு எந்த பக்கபலமும் என்னிடம் இல்லை. அவர் நடந்துக்கொண்ட விதம் சரி இல்லாததால் அவ்வாறு கூறினேன். இனி நான் திரும்ப அங்கு வருவதாக இல்லை.” என்று கூறி மறுத்துவிடுகிறார்.

அந்த நான்கு நாட்களும் டாக்டர் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து பார்த்துவந்த கிளினிக்கை டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் இல்லாததால் டாக்டர் சித்திக் ஜமால் அவர்கள் தனியாக பார்த்து வந்திருக்கிறார். இவர் திரும்பி வந்ததும் நீ வந்துவிடுவாய் என்று எங்களுக்கு தெரியும் என்று அவரும் அவர்கள் தந்தையும் கூறுகிறார்கள். இவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்த மூன்று மாத காலத்தில் இரண்டு முறை பெரிய கவர் அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. அது என்ன என்று கூட பார்க்காமல் வைத்துவிடுகிறார். “அந்த கவரில் என்ன இருக்கும் என்று எனக்கு தெரியும். அதை பார்க்க விரும்பவில்லை” என்று கூறிவிடுகிறார். அந்த தைரியம், உடனடியாக முடிவெடுக்கும் திறன், எனக்கு மிகப்பெரிய பிரமிப்பைக் கொடுத்தது.

அக்குபங்சருக்குள் அவர்கள் வந்த பிறகு இந்த மருத்துவத்தின் உண்மை அவர்களுக்குப் புரிந்ததும் முதல் கருத்தரங்கத்தை அவர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடத்துகிறார்கள். நானூறு மருத்துவர்கள் அந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கிறார்கள். டாக்டர் சகோதரர்களும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். “அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படாத அக்குபங்சர் மருத்துவம் குறித்த சந்திப்பை அப்போலோ மருத்துவமனை எப்படி அனுமதித்தது, அவர்களிடம் நாம் இந்திந்த கேள்விகளை கேட்கலாம்” என்று பேசிக்கொண்டு இருப்பதை இவர்கள் கேட்கிறார்கள். அதற்கு டாக்டர் சித்திக் ஜமால் அவர்கள், “நம்மிடம் உண்மை இருக்கிறது. அந்த உண்மையை மட்டும் ஏந்திக்கொண்டு மேடை ஏறுவோம்” என்று கூறுகிறார்.

டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் அக்குபங்சர் மருத்துவம் குறித்து மங்கையர் மலர் இதழில் கட்டுரையாக மாதாமாதம் ஏறக்குறைய பத்து மாதங்கள் பதிவு செய்து கொண்டு வந்த சமயத்தில் மக்களிடம் முழு வீச்சாக பரவலாக சென்றுக் கொண்டு இருந்த அந்த சூழலில் அலோபதி மருத்துவர்களின் நிர்பந்தத்தின் காரணமாக இவர்களின் கட்டுரை தடை செய்யப்படுகிறது. இதுபோன்ற எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த சூழலில் தான் அப்போலோ மருத்துவமனையில் கருத்தரங்கம் நடக்கிறது. முதலில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தை குறைத்து, இருபது நிமிடங்களுக்குள் உங்கள் உரையை முடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. அப்பொழுதும் டாக்டர் சித்திக் ஜமால் அவர்கள், “அவர்கள் கேட்கவரும் கேள்விகள் பற்றி நாம் யோசிக்க வேண்டாம். நம்மிடம் உள்ள சத்தியத்தையும் உண்மையையும் மட்டும் நாம் எடுத்து வைப்போம் வா” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் மேடை ஏறி அக்குபங்சர் தத்துவத்தையும் பஞ்ச பூத தத்துவத்தையும் கூற இரண்டு மணி நேரம் கடந்திருக்கிறது. அந்த மேடையில் மருத்துவர்கள் கேட்ட கேள்வியும் டாக்டர் சகோதரர்கள் அளித்த விளக்கங்களும் மிக முக்கியமாக நான் பார்க்கிறேன். இதுவும் ஹெல்த் டைம் கட்டுரையில் வந்திருக்கிறது.

அடுத்த கருத்தரங்கம் முப்பது நோயாளிகளைக் கொண்டு நடத்துகிறார்கள். அதில் நான்கைந்து பேர் ஸ்டான்லி மருத்துவமனையால் கைவிடப்பட்டு அக்குபங்சர் சிகிச்சையில் குணமான நோயாளிகள். சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரி மயிரை உலுக்கக்கூடிய விதமான சம்பாஷனைகளும் கலந்துரையாடல்களும் அந்த கருத்தரங்கில் நடந்திருக்கிறது. அதையும் “எப்படி கற்றோம்” என்ற கட்டுரையில் டாக்டர் சகோதரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் கடந்து எனக்கு டாக்டர் அவர்களுடனான அறிமுகமானது கோயம்புத்தூர் வித்யோதயா ஹாலில் அதிகாலை வேளைகளில் நடக்கும் இறை வழி கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நமது வாழ்வுக்கான வழிக்காட்டுதல்களாக நிறைய விஷயங்களை அவர்கள் அந்த கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டே இருந்தார். எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பி எனக்குள் இறங்கிய விஷயம், “உங்களுக்கு சொந்த வீடு கட்டவேண்டும் என்ற விருப்பத்துடன் வீடு கட்டுவது என்பது இறைவனின் துணை இல்லாமல் நாட்டம் இல்லாமல் சாத்தியப்படாது. ஆனால் நீங்கள் சொந்த வீடு கட்டியவுடன் உற்றார் உறவினர்களை அழைத்து எதற்காக கிரகப்பிரவேசம் நடத்துகிறீர்கள். பெருமைக்காகத்தானே. அங்கு வருபவர்களில் அதுபோல் ஒரு வீடு கட்டவேண்டும் என்ற ஆசை கொண்டவர்களும் வருவார்கள். அவர்களுக்கு அந்த ஏக்கத்தை நீங்கள் விதைப்பதாகத்தானே அர்த்தம். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி கூறி அமைதியாகக் குடியேற வேண்டியதுதானே” என்று சாதாரணமாக பகிர்வார்.

மற்றொன்று, “சாலை ஓரத்தில் எதற்கும் உபயோகம் இல்லாத அரசமரம் வேப்பமரத்தை தான் இந்த அரசாங்கம் நட்டிருக்கிறது. உண்மையில் ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால் பழ மரங்களை நட்டிருக்கலாமே. விலை கொடுத்து வாங்கும் ஏழை மக்கள் பசியாற உதவுமே.” என்று அவர் கேட்ட விஷயம் ஒரு பொதுவுடைமைவாதிகூட யோசித்து இருக்கமாட்டார்கள் என்று பல முறை நான் நினைத்து இருக்கிறேன். கூடுதலாக இன்னொரு விஷயம், “உங்களிடம் யாராவது வேலை பார்க்கிறார்கள், உங்கள் தோட்டத்தைக் கொத்தி விட, வீடு சுத்தம் செய்ய அல்லது உங்கள் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வருகிறார்கள். மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். அந்த சம்பளத்தை மாதத்தின் இறுதியில் கொடுக்காமல் அந்த மாத சம்பளத்தை முதலிலேயே கொடுத்துப்பாருங்கள். நிறைவாக அந்த மாதம் முழுதும் அவர்கள் வேலை செய்வார்கள். என்ற கருத்தையும் அவர் பதிந்திருக்கிறார். இந்த கருத்துக்கள் எல்லாமே அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளரா அல்லது ஆன்மீகவாதியா என்ற கேள்வியை எனக்கு எழுப்பி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் என்கின்ற இந்த ஆளுமை ஒரு அமைதியான புரட்சியாளர். அவர் ஒரு ஆன்மீகவாதி, மிகப்பெரிய மாமனிதர். அக்குபங்சரை நமக்கு கற்றுக்கொடுத்த அக்குபங்சரின் தந்தை டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் மற்றும் டாக்டர் சித்திக் ஜமால் இருவரின் அனுபவங்களைப் பயிலாமல் அக்குபங்சர் மருத்துவம் முழுமை அடையாது.   .     

- தொகுப்பு: ப்ரியா ஜெயகாந்த்


        

கருத்துரையிடுக

0 கருத்துகள்