செப்டம்பர் 28, 1929ல் பிறந்து, தனது 13 வயதில் தந்தையை இழந்த லதா மங்கேஷ்கருக்கு உடன் பிறந்தவர்கள் அவரோடு சேர்த்து ஐந்து பேர். மீனா ஆஷா, உஷா என்ற மூன்று சகோதரிகள் மற்றும் ஹிருதயநாத் என்கிற ஒரு சகோதரர். இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் பிரபல பாடகி.
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய லதா மங்கேஷ்கர் மராத்தி மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தும் ஒருகட்டத்தில் அவர் பாடலையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர் மராத்தி மொழிகளில் பாடிய பாடல்கள் ஹிட்டாகவே பல மொழிகளிலும் அவருக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது சகோதரிகளுக்கும், சகோதரரும் நன்றாக இருக்க உழைக்க ஓடிய லதா மங்கேஷ்கர் தனது திருமணம் குறித்து சிந்திக்காமலே இருந்தார். ’தொடர் பொறுப்புகள், தொடர் வாய்ப்புகள் அனைத்தும் ஒரு காரணம்’ என்று 2013ல் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டின் மீது தீரா ஆர்வம் கொண்ட லதா மங்கேஷ்கர் பாடல் பதிவுகளுக்கிடையேயான ஓய்வின்போது கிரிக்கெட் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னால் பிசிசிஐ தலைவருமான ராஜ் சிங்கும், லதாவின் சகோதரர் ஹிருதயநாத்தும் நண்பர்கள். அதனால் லதா மங்கேஷ்கருக்கும் ராஜ் சிங்குக்கும் நட்பு மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ராஜ் சிங் அவரது வீட்டில் கூறியிருக்கிறார். இவர்கள் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ராஜ்நாத்தின் அப்பா இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அப்பாவின் பேச்சை மதிக்கும் பிள்ளையானார் ராஜ்சிங்.
லதா மங்கேஷ்கரும் ராஜ்சிங்கின் அப்பா சொன்னதை மீறாமல் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ராஜ் நாத்தும் தன் காலத்தின் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் நண்பர்களாகவே இறுதிவரை வாழ்ந்து சென்றுவிட்டனர். இதையும் நேர்காணலில் குறிப்பிட்டு மனம் திறந்து பேசியிருந்தார் லதா மங்கேஷ்கர்.
இத்தனை திறமை இருந்தும், உலக அளவில் அங்கீகாரம் இருந்தும், யாரும் எட்ட முடியாத சாதனைகளை தொடர்ந்து செய்தும், தனது வாழ்வை ஒரு தவமாகவே வாழ்ந்த லதா மங்கேஷ்கருக்கு சாதாரண பெண்களின் கனவுகளைக் கைக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது சாதனை அளப்பரியது.
குடும்பம், குழந்தை, கணவர், வீட்டுப் பொறுப்புகள் என்று தனது சிறகுகளை சுருக்கிக் கொள்ளாமல் வானாளாவ உயர்ந்து பறந்து விரிந்த ஃபீனிக்ஸாய் சாதனைகளை நிகழ்த்திய இசை தேவதைக்கு நிறைவேறா காதலின் வலியை குரலின் வழி கடத்திவிட முடிந்திருக்கிறது.

0 கருத்துகள்