பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருக்கும் ஆசிரியனே இந்நாவலில் மையப்பாத்திரம். விடுமுறையின் போது புதிய பூச்சியொன்றைக்
கண்டுபிடிக்கும் நோக்கிய தேடலில் ஒரு மணற்பாங்கான இடத்தை அடைகிறான். அந்த இடம் விசித்திரமாக
இருக்கிறது. பெரிய பெரிய மணற்துளைகளைக் கொண்டதாக இருக்கிறது. கிராமவாசிகள் சிலர் திட்டமிட்டு
மணற்துளைக்கு கொண்டுசெல்லப்படும் அவன் அங்கிருந்து தப்பிக்க செய்யும் தந்திரங்களும்,
போராட்டங்களும் நிரம்பிய நாவல்.
அந்த மணற்துளையில் இருக்கும் ஒரு
பெண், பூச்சி ஆராய்ச்சியாளன் இவர்களைத் தவிர இந்நாவலின் மற்றுமொரு கதாபாத்திரம் மணல்
எனலாம். அந்தப் பெண்ணுக்கும், ஆராய்ச்சியாளனுக்குமான சண்டைகள், புரிதல்கள், உறவுநிலை
ஆகியன குறித்து விரிவாக பேசப்படுகிறது. இறுதியில் அவன் அங்கிருந்து தப்பித்தானா என்பதைக்
கடைசிவரை விறுவிறுப்பாகக் கொண்டு செல்லப்படுகிறது. வரிநெடுக மணலின் குறுகுறுப்பும்,
சொரசொரப்பும் படிப்பவருக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
நாவலின் நடையும் விவரிப்பும் படிப்போரை
மணல் குன்றுக்குள் இழுத்துச் செல்வதை உணர முடிகிறது. மொழிபெயர்ப்பாளர் விஜயபத்மா தன்னுரையில்
குறிப்பிட்டிருப்பது போல ஆண்டுகள் பல கடந்தும் உலகம் முழுக்க இருக்கக்கூடிய பெண்களின்
நிலை எப்போதும்போலவே இருக்கின்றன என்பது நிதர்சனமாக தெரிகிறது.
கோபோ ஏப் என்ற ஜப்பானிய எழுத்தாளரால்
எழுதப்பட்டு, உலகில் இதுவரை 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது இந்நாவல். இந்நூலின்
ஆங்கில மொழிபெயர்ப்பாளர் டேல் சாண்டர்ஸ். 1962ல் வெளியாகி அதிக பாராட்டைப் பெற்ற ’மணற்குன்று
பெண்’ நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்திருக்கிறார் ஜி.விஜயபத்மா.
ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் The
Woman in the dunes என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படம் புகழ்பெற்ற கேன்ஸ்
திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது.
நூலில் இருந்து:
எங்கும் இருள் வியாபித்திருந்தது.
அவனைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் தன் கண்களையும் மூடிக்கொண்டு காதுகளையும் பொத்திக்
கொண்டன. அவன் மரணத்தின் கடைசி நொடிகளைப் பார்க்க ஒருவரும் அவன் அருகில் இல்லை. துக்கம்
தொண்டையை அடைக்க கடைசி முயற்சியாக தன் முழுத்திறனையும் உபயோகித்து, அடித்தொண்டை கிழியுமளவுக்கு
சப்தமெடுத்து, ’’யாராவது உதவி செய்யுங்களேன்’’ என்று வெடித்து அழுது கதறினான்.
சாவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவனுக்கு
இனி என்ன இருக்கிறது. அவன் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் இணைந்து வாழ்ந்துவிட
வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தான். விரைவில் அவன் தாடை மண்ணில் புதைபட போகிறது. அடுத்து
அவன் கண்கள். இதற்குமேல் அவனால் தன் நிலைமையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
‘’தயவு செய்யுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்…
நான் உங்களுக்கு எதுவானாலும் செய்கிறேன்’’
நூல் விவரங்கள்:
ஆசிரியர் – கோபோ ஏப்
தமிழில் – ஜி. விஜயபத்மா
பக்கங்கள் – 351
விலை – 220
பதிப்பகம் – எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 2.
0 கருத்துகள்