’இந்திய அக்குபங்சரின் தந்தை’ டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் காலமானார்

இந்திய அக்குபங்சரின் தந்தையும், ஒற்றைப்புள்ளி சிகிச்சையை மீள் உருவாக்கம் செய்து லட்சக்கணக்கான மக்களை மருந்தில்லா மருத்துவத்தில் நலம்பெறச் செய்தவருமான டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் நேற்று மாலை காலமானார்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது முதுகலை பட்டத்தை முடித்தவர். நவீன மருத்துவம் குறித்த ஆய்வைச் செய்தவர். நவீன மருத்துவம் உடலின் தொந்தரவுகளை உடலுக்குள்ளேயே தேங்க வைத்து உடல் அதன் பணிகளை செய்யவிடாமல் தடுத்து தீவிர நோய்க்கு உள்ளாக்குகிறது என்கிற கருத்தியலை எடுத்துக் கூறியவர்.

’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப் போல்
இனிதாவது எங்கும் காணோம்’ என்கிற மகாகவியின் கூற்றைப் போல்,

 ’யாமறிந்த மருத்துவ முறைகளில் ஒற்றைப் புள்ளி அக்குபங்சர் சிகிச்சையைப் போல் எந்த பக்கவிளைவுகளும் இல்லாத அதே சமயத்தில் உடலை அதன் போக்கில் இயங்கச் செய்கிற மருத்துவம் வேறெதுவும் இல்லை’ என்பதை மிக விரைவிலேயே கண்டறிந்தார்.

ஆம்.. நவீன மருத்துவத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மானை எது சரியான மருத்துவம் என்கிற தேடலை நோக்கி நகர்த்தியது, எனவே நவீன மருத்துவம் செய்வதை விட்டுவிட்டு அதிலிருந்து வெளியேறி அக்குபங்சர் மருத்துவத்தை மீள் உருவாக்கம் செய்து ஒற்றைப் புள்ளி சிகிச்சைக்கு மாறினார்.  ’ஒரே விதமான நோய்க்கு ஒரே மாதிரியான மருந்தை இரண்டு வெவ்வேறு மனிதர்களுக்கு கொடுக்க முடியாது’ என்பதை புரிந்துகொண்டவர் அக்குபங்சரில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் துவங்குகிறார்.

எந்த வித மருந்தும் இல்லாமல் தொடு சிகிச்சையில் ஆற்றலைத் தூண்டிவிடுவதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க முடியும் என்று கண்டுகொண்டார். 1984 – 1999 காலகட்டங்களில் அக்குபங்சரில் மாபெரும் மருத்துவ புரட்சியை ஏற்படுத்தி இருந்தார். டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் மற்றும் டாக்டர். சித்திக் ஜமால் இருவரும் டாக்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அன்றைய மருத்துவர்கள் தங்களது எம்பிபிஎஸ் படிப்புக்குப் பின்னர் அக்குபங்சர் படிப்பையும் இணைத்துக் கொள்வதை பெருமையாக கருதினர்.


ஒற்றைப் புள்ளி சிகிச்சை (Classical Acupuncture) என்பது உடலில் ஏதேனும் ஒரு புள்ளியில் தொடுவது, அல்லது சிறு ஊசியால் லேசாக அழுத்துவது ஆகும். ஒவ்வொரு நாள் காலையிலும் காலை 5.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் 300 நோயாளிகள் அவரிடம் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினர்.

கருப்பையை நீக்க வேண்டும், கருப்பையில் கட்டி, குழந்தையின்மை, புற்றுநோய் என உடலில் தீவிர தொந்தரவுகளோடு அவரை நாடி வந்தவர்கள் குணமடைந்து சென்றனர். அவரது புகழ் தமிழகம் கடந்தும் பரவியிருந்தது. 15 வருடம் ஒற்றைப் புள்ளி சிகிச்சையில் லட்சக்கணக்கான மக்களைக் குணமாக்கியவர், அது குறித்து தனது அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி நூல்களாகவும் வெளியிட்டிருக்கிறார்.

சுகப்பிரசவம் எல்லாருக்கும் சாத்தியம் என்பது தொடங்கி உடல் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது வரை முக்கியமான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

‘மருந்துகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் இந்த உடல் மிக விரைவாக தொந்தரவிலிருந்து மீண்டுவிடும்’ என்பதை தன்னிடம் வந்த அனைவருக்கும் செயலால் உணர்த்தியவர்.

டாக்டர்.ஃபஸ்லூர் ரஹ்மானிடம் சிகிச்சை பெற்று பூரண நலம்பெற்ற தன் மனைவியைப் பார்த்து, இம்மருத்துவத்தைக் கற்று பொது மக்களுக்குக் கொண்டு செல்ல விரும்பினார் திருமிகு.போஸ் முகமது மீரா.  டாக்டர் சகோதரர்களைப் போலவே திருமிகு. போஸ் முகமது மீரா மற்றும் திருமிகு. அ.உமர் ஃபாரூக் ஆகியோரிடம் இருந்து அக்குபங்சரின் ஒற்றைப் புள்ளி தத்துவமானது கிளைபரப்பி  வளர்ந்து செழித்திருக்கிறது.

கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் நிறுவனத்தின் இயக்குனர் திருமிகு. போஸ் முகமது மீரா மற்றும் அந்நிறுவனத்தின் முதல்வர் திருமிகு. அ.உமர்பாரூக் ஆகியோர் நேற்று மாலை நேரில் அஞ்சலி செலுத்தினார். அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா),  கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்  டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது.

அவரைப் பின்பற்றிய அக்குஹீலர்களும், எண்ணற்ற அக்குபங்சர் பயிலும் மாணவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். 


சென்னை, சாந்தோம் கடற்கரையில் உள்ள டாக்டர்.ஃபஸ்லூர் ரஹ்மான் வீட்டில் அவரது உடல் காலை பத்து மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

 - இவள் பாரதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்