1908ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி, வேலை நேரத்தைக் குறைக்க; கூலியை உயர்த்த; வாக்குரிமையைக் கோர என பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய போராட்டமே மகளிர் தினத்தின் ஆணிவேர். இதையறிந்தோ, அறியாமலோ நாம் கோலம் போட்டி, சமையல் போட்டியென மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோமேயென்ற வருத்தம் மேலோங்கியிருந்தது. அதற்கு மாற்றாக, மருந்தாக இந்த இதழை என் கைகளில் கிடைக்கப் பெற்றேன்.
தெரிவை என்பது 25-30 வயது வரையுள்ள பெண்களின் பருவத்தைக் குறிப்பதாகும். மனமும் உடலும் முதிர்ச்சி பெற்று, சார்பு நிலையிலிருந்து சற்று மீண்டு, தன்னையறியாமல் பக்குவடைந்த பருவமே, தலைப்பானது சாலப் பொருத்தமாகியிருக்கிறது. ஏனெனில், முழுக்க, முழுக்க பெண்களின் படைப்புகளை உள்ளடக்கிய இதழ்.
எள்ளல்களையும், ஏளனங்களையும் புறந்தள்ளி, இலக்கியத்தில் பெரும்பான்மை தளங்களில் படைப்புகளைப் படைத்து, போராடி, சமூகத்தில் தங்களுக்கான இருப்பினைப் பதிவு செய்திருக்கும் அறிமுக எழுத்தாளரிலிருந்து, மூத்த படைப்பாளிகளின் தொகுப்பே இவ்விதழில் மணம் பரப்புகிறது.
கவிதை
சொற்களைக்
கட்டுவதே கவிதை. இதழ் முழுவதும் கவிதைகளே
வியாபித்திருக்கின்றன. ஓரு சோற்றுப் பதம்
போல சில துளிகள்.
யார்
மகள்
யார்
மனைவி
அவரின்
தாயின்
....
....
...
கீறுபட்டுக் கொண்டிருக்க முடியாது
தப்பியோடிக்கொண்டிருக்கிறேன்
எல்லா திசைகளும்
எதிரொலிக்கக்
கத்துவேன்
நான்
யாருமில்லநான் நான்தானென்று.
ஒவ்வொரு
உறவுக்குள்ளும் தன்னைத் தொலைத்துத், தன் சுயத்தின் மூலமே
அடையாளப்படுத்திக் கொள்ள துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் ஏக்கக் குரலையும் பதிவு செய்யும் அழகான கவிதை.
சொ.
கலையரசியின் 'பெண் சிசு' கவிதை,
ஆண்குழந்தை தான் வேண்டும் என
விரதமிருக்கும் பெண்களை இப்படி சாடுகிறது,
"பெற்றதாய் பெண்ணாக இருக்க
பெறும்
பிள்ளை மட்டும்
ஆண்கள்
பிறக்க
தவம்
இருக்கும் தரம் கெட்ட
மனமே! ". பிள்ளைப்பேற்றிற்காக
தவமிருந்து, பெற்ற பிள்ளையை நெக்குருகும் வரிகளில்,
மலரும்
தூற்றிய
பதரும்
இன்று
நெல்லைத்
தந்தது.
எங்க வீடு
இவள்
பிரியங்களை மனப்பாடமாக வைத்திருக்கும்
அப்பாவிடம்
தோள்சாய்ந்தழுவது
பதின்
வயதிலேயே
நின்று
போயிற்று.
உமா மோகன், புதுவை
மனதின்
அடியாழத்தில் புதைந்திருக்கும் நம் இளமை நினைவுகளை
மீட்டெடுக்கும் வரிகள்.
கட்டுரை
:
கட்டுரையே
எனக்கு மிகவும் பிடித்த ஆகச்சிறந்த வகைமை. கருத்து செறிவும், ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பும், தெளிவான நடையும் மிக முக்கியம். கவிஞர்
தேன்மொழி தாஸை அறிமுகப்படுத்தி, அவரின்
'முருகியம்' கவிதைத் தொகுப்பை, நேர்கோட்டிலும், குறுக்குவெட்டிலும் அலசி அழகியலோடு எடுத்தியம்புகிறார்,
முனைவர். அரங்க மல்லிகா. பேதை, பெதும்பை, மங்கை, பேரிளம்பெண் என ஒவ்வொரு பருவத்திலும்,
தன் வாழ்க்கை பயணத்தைப் 'பெண்' என்ற அடைமொழி சிறைப்படுத்தியபோது,
அதை பலங்கொண்டு தகர்த்தெறிந்தத் தன் அனுபவத்தை 'என்
பெண் பயணம்' கட்டுரையில் சிலாகித்திருக்கிறார், புதுவையில் வசிக்கும் முனைவர். பெண்ணியம் செல்வகுமாரி. பலநாள் உழைப்பைக் கோரியிருக்கும், செறிவார்ந்த கட்டுரையைச் சமைத்திருக்கும் முனைவர் செ. ராஜேஸ்வரியின், 'உலகச்
சமயங்களில் பெண்ணியவாதிகள் (காளி, இடாகினி, லிலித்)' கட்டுரை ஆய்வுக்கு ஒப்பானது.
கட்டுரை
நமக்கு வழங்கும் புற அறிவும், கற்பிதங்களை
உடைத்தெறியும் வீரியமும் அளப்பரியது. இயற்கை சீற்றமாகட்டும், செயற்கை போர்களாகட்டும் மிகவும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். ஏனெனில், சூழலைப் பயன்படுத்தி வஞ்சிக்கும் ஆணின் கயமையே முக்கிய காரணி. போர்களில், பெண்ணின் வீரமும், தியாகமும் மறைக்கப்படுவதோடு வன்முறைக்கு உட்படுத்தப்படும் நிகழ்வுகளை அலசுகிறது,'ரஞ்சி'யின், 'போரும் பெண்களும்'.
'மூர்த்தி
சிறிதானாலும் கீர்த்தி பெரியது' என்பதுபோல வடிவத்தில் சிறிய அளவிலான ஹைக்கூ, நம்முள் தோற்றுவிக்கும் காட்சி படிமமாகட்டும், விழுமியமாகட்டும் ஆகச் சிறந்த தாக்கமுடையது.
அக்னி
பிழம்பு
பெண்
- சாந்தி சரவணன்.
மழைக்காலம்
அழையா
விருந்தாளி
ஈசல்
- சு. இராசேசுவரி.
வீதியில்
அடிப்பட்டுக் கிடக்கும்
குத்துயிர்
நாயின் முனகலில்
அடங்கிப்
போகிறது என்னுயிர்!
- இறைமொழி, சென்னை.
வெளிச்சப்
புள்ளிகள்
சருகுகள்
பாதைகள்
காட்டில் நிலா
- கவிதா பிருத்வி
சிறுகதைகள்
:
ஒரு நிகழ்வையோ,
ஓர் ஆளுமையையோ, கதைக் கருவாகிவிடுவதால், சிறுகதைகள் நம் மனதிற்கு மிக
நெருக்கமான வகைமையாகி விடுகிறது. மறைந்த தோழர் கலை இல்க்கியாவின் இதுவரை
வெளிவராத 'கொல்லும் வார்த்தை', சிறுகதையை வாசிக்கும் வாசகி, தன் நெஞ்சின் மீது,
சிறுபிள்ளை ஏறி குதிப்பதைப் போன்ற
பாரத்தையும், வலியையும் உணர்வாலென்றால் மிகையில்லை. புற்றுநோயால் மருத்துவமனையில் இறந்த பிள்ளையில்லா ஒருவனின் சடலம், வீட்டு வாயிலில் கிடத்தியிருக்க, கொள்ளி போடுவது யாரென்று, பங்காளிகளுக்கும், சம்மந்தி வீட்டாருக்கும் இடையே சச்சரவு தொடர்கிறது. தீடிரென, பங்காளியாக கதைசொல்லியின் கணவன், "எங்கண்ணன் மேல கைய வச்சிட்ட
வெக்காளி நான் உனக்குப் பொண்டாட்டிடா."கோபத்தோடு சீறுகிறான். எதிரியின் பொண்டாட்டியாக இருக்க சம்மதித்துவிட்டானென்றால், கொலைக்குக் துணிந்து விட்டான் என அமைதியாகி, இறந்தவரின்
அண்ணன் மகன் கொல்லி போடுவதாக
முடிவாகிறது. இந்த வார்த்தையை அசை
போட்ட கதை சொல்லிக்கு, "ஏன் நான்
உனக்கு பண்ணைக்காரன்னு சொல்லியிருக்கலாம். அங்கு ஏன் பொண்டாட்டி என்ற
சொல் வந்தது?"முள்ளாய் குத்தியது. மற்ற பெண்கள் யாருக்கும்
இதுகுறித்து தோணாததால், நான் மட்டும்தான் கேவலமான
பெண்டாட்டியா? என சிறுத்தும் போகிறாள்.
நாமும் தான்! கிராமத்தில் புழங்கும் இந்த சொலவடை, மனைவியின்
உரிமைக் குறித்து எத்தனை கீழ்த்தரமாக சித்தரிக்கிறது!
வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுக்குக், கடிதம் எழுதுவதாக தொடங்கும் சீதா வெங்கடேஷின், 'மன்னித்து விடு' கதை, வாசிக்க வாசிக்க நெக்குருக வைக்கிறது. கல்வியறிவில்லாத பெற்றோர்கள், தன் மகளின் நடவடிக்கையைக் கவனிக்காததால் தவறான பாதையில் சிக்குண்டதை, 'சம்மன்' னும், வீட்டு வேலை செய்யும் கனகாவின் மகன் ராகுல், போதைக்கு அடிமையாகி மீண்டதை, பிரியா ஜெயகாந்தின் 'சகவாசம்' கதையும் காத்திரமாக பேசுகிறது. மாறாக, தனியார் நிறுவனங்களின் ஆங்கில கல்வி மோகத்திற்கு அடிமையாகும் சித்ரா, தன்னுணர்வு பெற்றதைப் பதிவு செய்கிறது, கீதா சுந்தரரின் 'தங்க கூண்டு' கதை.
முத்தாய்ப்பாக ஒரு நேர்காணலும், விமர்சனக் கட்டுரையும்.
தேசிய
விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் தாயாரும்; பள்ளி ஆசிரியரும்; 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த படைப்பாளருமான திருமிகு. மேகலா சித்திரவேலைச் சந்தித்து சுவராஸ்யமாக உரையாடி அரிய செய்திகளைப் நம்முடன்
பகிர்ந்திருக்கிறார், தோழர் இவள் பாரதி. 23 வருடங்கள்
கழித்து, தன் மாணவர்களைக் குடும்பத்துடன்
சந்தித்த நிகழ்வை நெகிழ்ச்சியாக பகிர்ந்ததோடு, திருமண வாழ்க்கை, இலக்கியம், வெற்றிமாறனுடனான திரையுலக அனுபவம் என அனைத்தையும் வாசகருக்கு
விருந்தாக்கி, "நம் வேலையை நாம்
செய்து கொண்டே யிருந்தால் நமக்கு வந்து சேர வேண்டியது கண்டிப்பாக
வந்து சேரும்' என ஆதூரமாக வழி
காட்டுகிறார்.
தற்கால முக்கிய படைப்பான, அமுதா செல்வியின் 'பசி கொண்ட இரவு' சிறுகதைத் தொகுப்பை, கதைகள் கடத்தும் அதே வாதையோடு விமர்ச்சித்திருக்கிறார் பேரா. கவிதா சந்திரபோஸ்.
நறுமணம் கமழும் பல்வகை பூக்களை, நெருக்கமான சரமாகக் தொடுத்து கதம்ப மாலையாக நம் கையில் தவழ விட்டிருக்கும் தொகுப்பாசிரியர் அன்பாதவன் மற்றும் இவள் பாரதி அவர்களுக்கு பேரன்பும், பெரு நன்றியும். கனமான முகப்பு அட்டையோடு, நேர்த்தியான வடிவமைப்பையும் நல்கி துணைபுரிந்த அனைத்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
தெரிவை,
மகளிர் சிறப்பிதழ்,
தொகுப்பாசிரியர்கள் :
அன்பாதவன்,
இவள் பாரதி.
நம் பதிப்பகம்,
மார்ச் 2024,
128 பக்கங்கள்,
சென்னை
- 19.
0 கருத்துகள்